அனைவருக்கும் வணக்கம்!

ஒரு ஆசிரியர் பள்ளிகள் பற்றிய செய்திகளைக் கேட்டிருப்பீர்கள்.  அத்தகைய பள்ளிகள் எவ்வாறு இயங்கும் என்பது எப்போதும் ஆச்சர்யமாகவே இருக்கும் எனக்கு. தேனி அருகில் உள்ள அய்யனார்புரத்தில் இயங்கி வரும் அரசுப் பள்ளியும் அதற்கு அடுத்த நிலையில் உள்ள ஒரு ஆசிரியர் ஒரு தலைமை ஆசிரியையுடன் இயங்கி வரும் பள்ளி ஆகும்.   அப்பள்ளியை பற்றிய வரலாறு மிக நீண்டதாக இருந்தாலும், இப்போது நான் பகிர்ந்து கொள்ள விரும்புவது கடந்த ஓரிரு மாதங்களில் அங்கு நடந்து வரும் மாற்றங்களையும் நான் கலந்து கொண்ட மூலிகைத் தோட்ட துவக்க விழாவில் எனக்கு கிடைத்த அனுபவங்களையும் தான் (மிகச் சுருக்கமாக).  மாற்றங்கள் ஒவ்வொன்றும் ஒரு தனி மனிதனிடமிருந்து சமூகத்திற்கும் சமூகத்திடமிருந்து ஒரு தனி மனிதனுக்குமாக பரிமாறப்படுகின்றன.  இதில் முந்தையதற்கான அனுபவம் அதிகம், இந்த வையகமெங்கும் பரவிக் கிடக்கிறது உதாரணங்கள்.  அத்தகைய ஒரு மனிதனை ஒரு மாதத்திற்கு முன்பு எனக்கு திரு. தங்கேஸ்வரன் அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார்.   அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

EM_160813_21

இடமிருந்து வலமாக : நான் (மகேந்திரன்), தங்கேஸ்வரன், ஆசிரியர் (விஜயராஜா)

அவர் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர்; தன் குழந்தைகளையும் அதே அரசுப் பள்ளியில் சேர்த்து அக்கிராம மக்களுக்கு பெரும் நம்பிக்கை தரும் ஆசிரியர்.  மாணவர்களின் பெற்றோர்களை கலெக்டர்களாக பாவித்து, பள்ளியின் செயல்பாடுகளை, அங்கு பணி புரியும் ஆசிரியர்களின் செயல் திறனை எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்ய அழைப்பு விடும் (பொதுக் கூட்டத்திலும், நேரடியாகவும்) செயல்களின் மீது நம்பிக்கை கொண்ட ஆசிரியர் அவர்.  ஒரு மூலிகைத் தோட்டத் துவக்கவிழாவிற்கு பல முகங்கள் கொடுத்து அரசுத் துறையினரையும், தொண்டு நிறுவனங்களையும், ஊர்ப் பொது மக்களையும், சமூக நல விரும்பிகளையும் அவர் அங்கு ஒன்றாக சந்திக்க வைத்திருந்த ஆசிரியர் அவர்,  அப்பள்ளிக்கான ஒரு நீண்ட கால வளர்ச்சித் திட்டத்திற்கு அனைவரின் பங்களிப்பையும் அதன் அவசியத்தையும் அவ்விழா வழியாக அனைவரிடமும் அருமையாக பகிர்ந்து கொண்ட ஆசிரியர் அவர். அவ்விழாவில் அவரைப் பற்றி அவரது முந்தைய சாதனைகள் பற்றி பலரும் பாராட்டிப் பேசினர்.  அது அவருக்கு சக்தியூட்டியதோ இல்லையோ?! (எனக்கு தெரியாது) ஆனால் எனக்கு உள்ளத்தில் பெரும் நம்பிக்கையைத் தந்தது.

மூலிகைச் செடிகள் அதன் பயன்கள் துவங்கி, விவசாயம் அதன் இன்றைய நிலை, இன்றைய உணவுப் பழக்க வழக்கங்கள் அதன் விளைவுகள், வீட்டு / பாட்டி வைத்தியம், கல்வி, கிராமப்புற சவால்கள், ஊர் மக்களின் ஒத்துழைப்பு,  கல்வி, பொருளாதாரத்தால் கிடைக்கும் சமூக அந்தஸ்து, மாணவர்களுக்கான மாற்றுக் கல்வி அதற்கான முயற்சிகள் என பல தலைப்புகளில் அனைத்து சிறப்பு விருந்தினர்களும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.  அது மிகப்பெரிய கற்றலுக்கு வழி வகுத்ததென்றால் மிகையாகாது.

This slideshow requires JavaScript.

அவர் அப்பள்ளி வந்து மூன்றே மாதங்களில் அப்பள்ளி தலைமை ஆசிரியரின் பெரும் ஒத்துழைப்புடன் பள்ளியில் மாணவர்களின் மொழி வாசிப்புத் திறன் மிகப் பெரிய மாற்றத்தினை கண்டுள்ளது.  மூன்றாம் வகுப்பு நான்காம் வகுப்பு மாணவிகள் ஆங்கிலத்தை வாசிப்பதையும் எழுதுவதையும் பார்த்து அசந்து போனேன்.  இருவரின் விடாமுயற்சி பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை இருமடங்காக்கியுள்ளது.  ஒரு காலத்தில் ஐம்பதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்த பள்ளியில் இன்று வெறும் 16 மாணவர்கள் படிக்கிறார்கள் என்பது எத்தனை வருத்தமான செய்தி.  அதனை மாற்றி பெற்றோர்களின் ஆங்கில வழிக் கல்வி மோகத்திற்கு முற்றுப் புள்ளி வைத்திட இவர் துவங்கியிருக்கும் இம்முயற்சி மிகப் பாராட்டுதலுக்குரியது.  அவருக்கும் பள்ளி தலைமை ஆசிரியை, மாணவ மாணவியர் மற்றும் ஊர் மக்களுக்கும் வாழ்த்தி பழகுவோர் இயக்கத்தின் சார்பாக வாழ்த்துகளுடன் அவரது இப்பயணத்தில் என்னால் ஆன ஒத்துழைப்பை வழங்குவேன் என்ற உறுதிமொழியையும் வழங்கி விட்டு அங்கிருந்து புறப்பட்டேன்.  வெகுவிரைவில் மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன்.

அவர் பெயர் விஜயராஜா அவரை வாழ்த்த , அப்பள்ளியின் வளர்ச்சித் திட்டங்களில் பங்களிக்க விரும்பினால் 96291 02424

அன்புடனும் வாழ்த்துக்களுடனும்

ரா. மகேந்திரன்

9445528556

வாழ்த்தி பழகுவோர் இயக்கம்

Advertisements